மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 15 இலங்கையர்கள் மீட்பு
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடனும், மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது, மியான்மரின் மியாவாடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில், கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 15 இலங்கையர்களை மீட்பதில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது.
ஆட்கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட, பாதிக்கப்பட்டவர்கள் மே 07ஆம் திகதி இலங்கைக்குத் திரும்ப உள்ளனர். இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான இராஜதந்திர ரீதியிலான ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த இலங்கையர்களை மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த அளப்பரிய ஆதரவிற்காக அமைச்சானது, தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சர்வதேச விமானப் பயணம் மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்தை எளிதாக்கியதற்காக தாய்லாந்தில் உள்ள புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) அளித்த பங்களிப்பையும், இம்மீட்புச் செயன்முறை முழுவதும், மியன்மாரில் செயற்படும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் வழங்கிய நலன்புரி உதவியையும் அமைச்சு நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் போது, ஆட்கடத்தல் சதித்திட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் (SLBFE) வேலை வாய்ப்புகளைச் சரிபார்க்குமாறும், இலங்கையர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Comments (0)
Facebook Comments (0)