சவூதி மன்னரின் விருந்தினர்களாக ஹஜ் செய்ய பலஸ்தீனியர்கள் உட்பட பல நாட்டினருக்கும் வாய்ப்பு
இரு புனித ஹரம் ஷரீபின் காவலர்களான சவூதி அரேபிய மன்னர்கள், அவர்களது தனிப்பட்ட செலவில் இஸ்லாமிய அறிஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், ஏழைகள், அகதிகள் என பல்லாயிரக்கணக்கான மக்களை உலகின் பல நாடுகளில் இருந்தும் மக்கா, மதீனாவுக்கு விஜயம் செய்து இலவச ஹஜ் செய்ய வாய்ப்பளித்து வருகின்றனர்.
இந்த ஹஜ், உம்ரா கிரியை நிறைவேற்றுவதற்காக ஒருவருக்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவாகும். இந்த செலவு நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடியதாகும். அப்படியிருந்தும் அத்தனை செலவுகளையும் பொறுப்பெடுத்து ஆயிரக்கணக்கான ஹாஜிகள் ஹஜ், உம்ரா செய்ய வாய்ப்பளிப்பது என்பது இலகுவான காரியமல்ல. அல்லாஹ்வின் திருப்பொறுத்தத்தை நாடியவர்களால் மாத்திரம் தான் இத்தகைய அளப்பரிய சேவையைச் செய்ய முடியும்.
அந்த வகையில் இவ்வருடமும் ஹஜ் உம்ரா கிரியைகளை நிறைவேற்றவென சவூதி அரேபிய மன்னரும் இரு புனித ஹரம் ஷரீபின் காவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் தனது சொந்த செலவில் புனித ஹஜ் கடமையை இலவசமாக நிறைவேற்றவென உலகமெங்குமிருந்தும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு புனித மக்காவுக்கு அழைத்துள்ளார்.
குறிப்பாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பலஸ்தீனர்களும் வருடாவருடம் முன்னுரிமையளித்து அவர்களில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இலவசமாக இக்கடமையை நிறைவேற்ற அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் இவ்வருடமும் பலஸ்தீனில் இருந்தும் ஷுஹதாக்களின் உறவுகள் 1,000 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற மன்னர் வாய்ப்பளித்துள்ளார். இந்த இலவச ஹஜ் வாய்ப்பு சவூதி மன்னர் செய்யும் அளப்பரிய சேவைகளில் ஒன்றாகும். இச்சேவை உலக முஸ்லிம்களால் வெகுவாகப் பாராட்டப்படுகின்றது.
கடந்த 26 வருடங்களாக தொடரும் இப்பணியின் ஊடாக இற்றைவரையும் 64,000 பேர் சவூதி அரேபிய மன்னர்களின் அழைப்பின் பேரில் இலவசமாக ஹஜ், உம்ரா கிரியை நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் புனித மக்கா, மதீனா மஸ்ஜித்களுக்கும் அவற்றை நாடி வருகின்ற அல்லாஹ்வின் விருந்தாளிகளுக்கும் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் அளவிலா சேவைகளைச் செய்து வருகின்றனர். அவர்கள் ஆற்றிவரும் சேவைகளின் நிமித்தம் 'இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர்' என்ற நற்பெயரை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸும் இப்பெயரைப் பெற்றுள்ளார். இவர் இப்பள்ளிவாசல்களின் மேம்பாட்டுக்கும் இப்பள்ளிவாசல்களில் தங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்றவரும் உலக முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேவையாற்றி வருவது யாவரும் அறிந்த விடயமே.
அந்த வகையில் சவூதி மன்னரின் விருந்தாளர் திட்டத்தின் கீழ் இலங்கையருக்கும் வருடாவருடம் இலவச ஹஜ் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் ஹஜ், உம்ரா கிரியைகளை ஏற்கனவே நிறைவேற்றியுள்ளனர்.
அதற்கேற்ப இவ்வருடமும் அல்லாஹ்வின் அருளாலும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் அயராத முயற்சியின் பயனாகவும் இந்நாட்டில் இருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் என பலர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற எதிர்வரும் நாட்களில் ஹஜ், உம்ரா கிரியைகளை நிறைவேற்ற மக்கா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாரிய சேவைகளைச் செய்து வருகின்ற சவுதி மன்னர், பட்டத்து இளவரசர், இஸ்லாமிய விவகார, கலாசார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவர் உள்ளிட்டோரின் பணிகளையும் சேவைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வதோடு அவர்கள் தொடர்ந்தும் இது போன்ற நற்சேவைகளை முன்னெடுக்கவும் அல்லாஹ் அருள்புரியப் பிரார்த்திக்கின்றேன்.
அஷ்ஷைக் எம்.எச். ஷேஹுத்தீன் மதனி (பி.ஏ)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம் கொழும்பு
Comments (0)
Facebook Comments (0)